Tamil Quran | குர்ஆனைப் படியுங்கள்

Chapter 92 (Sura 92)
1; (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
2; பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
3; ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
4; நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
5; எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
6; நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
7; அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
8; ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
9; இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
10; அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
11; ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
12; நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
13; அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
14; ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
15; மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
16; எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
17; ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
18; (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
19; மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
20; மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
21; வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.

Pages ( 92 of 114 ): « Previous1 ... 9091 92 9394 ... 114Next »